தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

June 24, 2013

பெண்கள் பொதுக்கூட்டம், போராட்டத்தில் கலந்து கொள்ளலமா?

ஜுன்,25: பேரணி ஆர்ப்பாட்டம் என முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அந்நியர்களின் பார்வையில் மழையிலும் கூட மார்க்கச் சகோதரிகளைக் காட்சிக்கு வைப்பது மார்க்கத்தில் ஆகுமான காரியமா?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன்னாள் இக்கேள்வியைப் பரப்புவோரின் பச்சை நயவஞ்சகத் தனத்தை நாம் எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்த கேள்வி தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான கேள்வியா? அல்லது அனைத்து இயக்கங்களுக்கான கேள்வியா

தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் (ஒரு இயக்கம் தவிர) தாங்கள் நடத்தும் போராட்டங்களில் பெண்களைப் பங்கேற்கச் செய்து வருகின்றனர். தமுமுக, ஜமாஅதே இஸ்லாமி, மமக,  விடியல் குரூப், முஸ்லிம் லீக், தேசிய லீக் உள்ளிட்ட எல்லா இயக்கங்களும் போராட்டத்தில் பெண்களைப் பங்கெடுக்கச் செய்கின்றன. இது போல் பெண்கள் கலந்து கொண்ட சில இயக்கங்ளின் போராட்டங்களை ஜமாஅதுல் உலமா சபையும் ஆதரித்து பங்கு கொண்டுள்ளன. 

கப்ரு வணங்கிக் கூட்டமான ஜமாலி குரூப் மட்டுமே பெண்களைப் போராட்டத்தில் பயன்படுத்துவது கூடாது என்று கூறுகிறது. ஆனால் தர்காக்களில் ஆண்களும் பெண்களும் ஒட்டி உரசிக் கொள்வதை இவர்கள் கண்டிப்பதில்லை. இக்கேள்வியைக் கேட்பவர் கப்ரு வணங்கிக் கூட்டத்தில் உள்ளவர் என்றால் தனது நம்பிக்கைக்கு ஏற்ப இக்கேள்வியைக் கேட்டுள்ளார் என்று கருதலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் அனைவரும் ஆதரித்து நடைமுறைப்படுத்தும் ஒரு காரியத்தை தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கேட்டால் கேட்பவர் நயவஞ்சகர்களில் ஒருவர் என்பது தெளிவு.

இதன் காரணமாகத் தான் கேள்வி கேட்டவர் யார் என்பதை முதலில் கூறு என்று கேட்டோம். நடுநிலை வேடம் போட்டு தவ்ஹீத் ஜமாஅத்தை மட்டும் தரம் தாழ்த்தும் வேஷத்தைக் களைவதற்காக இவ்வாறு கேட்டோம்.

இவர் கப்ரு வணங்கியாக இருந்து பெண்கள் போராட்டத்தில் கலந்து கொள்வது கோபத்தை ஏற்படுத்தினால் அனைத்து இயக்கங்களும் இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று இவர் கேட்டிருப்பார். இவர் அப்போஸ்தலர் பவுல் போல் ஒரு கடைந்தெடுத்த கபடதாரி என்பதால் தான் மற்ற எந்த இயக்கத்தின் செயல்களும் இவரது கண்களுக்குத் தெரியவில்லை.

நாம் கள்ளப் பேர்வழி என்று கூறியதற்கு இது மட்டும் காரணம் அல்ல. இன்னும் இருக்கிறது. அடுத்தடுத்த கேள்விகளின் போது அவற்றைத் தெளிவுபடுத்துவோம். பெண்கள் அன்னிய ஆண்கள் முன்னால் முகம் கை தவிர மற்ற அங்கங்களை மறைத்துக் கொண்டு வரலாம் என்பது பொதுவான அனுமதி.  
இதற்கு நபி வழியில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பெருநாள் தொழுகையில் ஆண்கள் கலந்து கொள்வது போல் பெண்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று மார்க்கம் கட்டளை இடுகிறது. 

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பிவைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரசாரத்திலும் கலந்துகொள்ள வேண்டும். 

மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்துகொள்ள மேலங்கி இல்லையே (அவள் என்ன செய்வாள்?)! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக்கொடுக்கட்டும்! என்றார்கள். இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். புஹாரி 351

கள்ளப் பேர்வழிகளின் வாதப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்களை காட்சிக்கு வைத்தார்கள் என்று ஆகுமே? அதுவும் பெருநாள் தினத்தில் புத்தாடை எல்லாம் அணிந்திருப்பார்களே? என்றெல்லாம் இவர்கள் கேட்பார்களா?

நபிகள் நாயகத்தின் மீது பழி சுமத்துவதால் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்க முடியும் என்றால் அதையும் செய்பவர்கள் இவர்கள். ஐந்து வேளைத் தொழுகையிலும் பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் எந்தத் தடுப்பும் போடப்படவில்லை. பார்க்க பெண்கள் பள்ளிக்கு வரலாமா ஆண்களும் பெண்களும் ஒன்றாக உளூச் செய்துள்ளனர். இதனால் கைகளை மனிக்கட்டு வரை வெளிப்படுத்தும் நிலையும் தலையைத் திறக்கும் நிலையும் ஏற்படும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பெண்களைக் காட்சிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய காலத்தில் (பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்) ஆண்களும் பெண்களும் சேர்ந்தே (ஓரிடத்தில்) உளூ செய்வார்கள். புஹாரி 193 போர்க்களத்திலும் பெணகள் கலந்து கொண்டு காயமடைந்த ஆண்களுக்கு மருத்துவம் செய்யவும் தண்ணீர் விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். ஆண்களைத் தொட்டு தூக்கும் நிலையும் ஏற்படும். 
324 ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை தடுத்துக் கொண்டிருந்தோம். 

இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார். -என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா -ரலி) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்து கொண்டார். இதில் என் சகோதரி ஆறுபோர்களில் தம் கணவரோடு இருந்தார்.

- என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்: (பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்! என்று சொன்னார்கள். 

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்த போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா? என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். 

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்ன என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும் என்பதையும் சேர்த்தே கூறுவார். -நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்- வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரசாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள் என்று கூறினார்கள் என்றார் உம்மு அத்திய்யா. (இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான் மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)? என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா முஸ்த-பா போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா? என்று (திருப்பிக்) கேட்டார்கள். சபைகளில் கேள்வி கேட்பதற்காக பெண்கள் வந்து நபிகள் நாயகத்திடம் கேள்வியும் கேட்டனர். அதைப் பல ஆண்களும் பார்த்தனர். புஹாரி 351, 979, 1250, 1953 

ஹஜ் பயணத்தின் போது ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயணித்துள்ளனர். அப்போது பெண்கள் ஆண்களின் பார்வையில் பட்டுள்ளனர். 

6228 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (விடைபெறும்' ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸைத் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்த்திக் கொண்டார்கள். ஃபள்ல் மிகவும் அழகான வராயிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு மார்க்க விளக்கம் அளிப்பதற்காகத் தமது வாகனத்தை நிறுத்தியிருந்தார்கள். 

(அப்போது) கஸ்அம்' குலத்தைச் சேர்ந்த அழகான பெண்ணொருத்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்டுவந்தார். அப்போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து நோக்கலானார். அந்தப் பெண்ணின் அழகு அவருக்கு ஆச்சரியத்தை ஊட்டியது. நபி (ஸல்) அவர்கள் திரும்பிப் பார்த்த போது ஃபள்ல் அப்பெண்ணைக் கூர்ந்து பார்ப்பதைக் கண்டார்கள். உடனே ஃபள்-ன் முகவாயைத் தமது கரத்தால் பிடித்து அப்பெண்ணைப் பார்க்கவிடாமல் அவரது முகத்தைத் திருப்பி விட்டார்கள்.
  
அப்போது அப்பெண் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் தன் அடியார்கள் மீது விதித்துள்ள ஹஜ் என் தந்தையின் மீது கடமையாயிற்று. அவரோ வயது முதிந்தவர்; வாகனத்தில் அவரால் சரியாக அமர இயலாது. ஆகவே நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள். புஹாரி 6228

இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அறிவுடையோருக்கு இது போதுமானதாகும். மேற்கண்ட கேள்வியில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசக அமைப்பைப் பற்றியும் நாம் சுட்டிக் காட்ட வேண்டும். கேள்வி கேட்கும் போது இது கூடுமா என்று கேட்பது ஒருவகை. பெண்களைக் காட்சிப் பொருளாக்கலாமா? என்று கேட்டிருப்பது கேட்டவரின் வக்கிர புத்தியையும் தவ்ஹீத் ஜமாஅத் மீது உள்ள வெறுப்பின் காரணமாக சமுதாயப் பெண்களைக் காட்சிப் பொருள் என்று வர்ணிக்கும் கேவலப்போக்கையும் நாம் கண்டு கொள்ள முடியும்.

ஒரு செயலைக் குறை கூறி ஒருவர் கேள்வியைக் கேட்கிறார் என்றால் அந்தச் செயலை அவர் செய்யாமல் இருக்க வேண்டும். கேள்வி கேட்டவர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றூலாத் தலங்களுக்கோ செல்வாரா? இல்லையா? செல்வார் என்றால் உங்கள் மனைவியைப் பலருக்கும் காட்சிப் பொருளாகக் காட்டலாமா? என்ற கேள்வி இவரை நோக்கித் திரும்புமே?

தனது மனைவி மற்றும் குடும்பப் பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிப்பாரா? இல்லையா? அனுமதிப்பார் என்றால் அப்போது பலரும் அவர்களைப் பார்க்கும் நிலை ஏற்படாதா? இதே கேள்வியைத் தனக்கெதிராக அவர் கேட்டுக் கொள்ளட்டும்.

முறையாக ஆடை அணிந்து இவர் குடும்பத்துப் பெண்கள் பள்ளிக்கூடம் அல்லது கல்லூரிக்குச் செல்வார்களா? இல்லையா? செல்வார்கள் என்றால் பலரது பார்வையில் படுவார்களா? இல்லையா? மேற்கண்ட அதே கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளட்டும்.

பெரிய கூட்டங்களில் பெண்கள் மீது படும் பார்வையை விட ஓரிரு பெண்கள் மீது பார்வை கூர்மையாகப் படுமே அது பரவாயில்லையா? இதில் கேள்வி கேட்பவரின் கொள்கை தான் என்ன? மார்க்க அடிப்படையில் ஒன்றைக் கூடாது என்ற கருத்தை விதைப்பவர் அதற்கான குர்ஆன் ஹதீஸ் ஆதரங்களுடன் தான் முன் வைக்க வேண்டும்.

நாம் ஆதராத்தை முன் வைத்து விட்டோம். கெட்ட நோக்கத்தில் கேள்வி கேட்டவர்கள் தமது ஆதாரங்களை எடுத்து வைக்கட்டும். கள்ளப் பேரவழிக்கு வக்காலத்து வாங்கி ஏதோ பயங்கரமான கேள்வியைக் கேட்டுள்ளதாக முட்டுக் கொடுத்தவர்களும் இக்கேள்விகளை மாதக்கனக்கில் பரப்பியவர்களும் இந்தப் பதிலையும் பரப்ப வேண்டுமே? இவர்கள் எங்கே போய் விட்டார்கள்? ஏன் இவர்களால் பரப்ப முடியவில்லை

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More