தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 25, 2013

ரூ.10 கோடியில் ஆழப்படுத்திய வெள்ளாற்று முகத்துவாரம் தூர்ந்ததால் அவதி!

பரங்கிப்பேட்டை,ஜுலை.25: பரங்கிப்பேட்டை வெள்ளாற்றுயில் ரூ.10 கோடி செலவில் ஆழப்படுத்தப்பட்ட முகத்துவாரம், ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தூர்ந்துபோனதால் 30-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் அருகே, வெள்ளாற்றில் முகத்துவாரம் உள்ளது. முடசல்ஓடை, கிள்ளை, பில்லுமேடு, எம்.ஜி.ஆர்., திட்டு, பரங்கிப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள், இந்த முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.வெள்ளாற்று முகத்துவாரம் அடிக்கடி தூர்ந்துபோனதால், கிள்ளை, பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால், வெள்ளாற்று முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த வேண்டும் என, 20 ஆண்டுகளாக 30 கிராம மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 10 கோடி ரூபாய் மதிப்பில், திட்டமிட்டு ஆறு மாதங்களுக்கு முன் வெள்ளாற்று முகத்துவாரம் ஆழப்படுத்தப்பட்டு,விசைப்படகுகள், பைபர் படகுகள், லம்பாடி இன்ஜின் பொருத்திய படகுகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் சென்று வந்தன.


இந்நிலையில், முகத்துவாரம் தற்போது மீண்டும் தூர்ந்துபோனதால் கிள்ளை, பரங்கிப்பேட்டை கடற்கரையோர மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ளாற்று முகத்துவாரத்தில் நீரோட்டம் அதிகமுள்ள நேரங்களில் அனைத்து வகையான படகுகளிலும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவர். கரைக்குத் திரும்பும்போது முகத்துவாரத்தில் பெரும்பாலான படகுகள் சிக்கிக் கொள்கின்றன. சிக்கிய படகுகளை வேறு படகு மூலம் கயிறு கட்டி மீட்பதும் தொடர்கதையாக உள்ளது. 


தற்போது மண்மேடுகள் அதிகமாக உருவாகி முகத்துவாரம் முற்றிலுமாக தூர்ந்து போய் விட்டது. இதனால் கடந்த ஒரு வாரமாக விசைப்படகுகள், கட்டுவலை படகுகள் கடலுக்குச் செல்ல முடியாமல், முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் கடற்கரையோரம் நிறுத்திவைத்துள்ளனர்.
இதனால் இப்பகுதியிலிருந்து வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி குறைந்துவிட்டது. தற்போது லம்பாடி இன்ஜின் பொருத்திய படகுகளில் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். எனவே, வெள்ளாற்று முகத்துவாரத்தை நிரந்தரமாக ஆழப்படுத்த மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30 கிராம மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

வெள்ளாற்று முகத்துவாரத்தை ஆழப்படுத்த அரசு 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், டிரஜ்ஜர் மூலம் ஆழப்படுத்தாமல் விட்டு விட்டனர். இதனால்தான் கடந்த ஆறு மாதத்திற்குள் முகத்துவாரம் மீண்டும் தூர்ந்துபோய்விட்டதாகவும், 10 கோடி ரூபாய் பாழாகி விட்டதாக மீனவர்கள் புகார் கூறுகின்றனர். முகத்துவாரத்தை ஆழப்படுத்தியது குறித்து மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More