தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

August 05, 2013

கிளைச் சிறை மதில் சுவர் உடைந்ததால் அச்சம்! பாதுகாப்பற்ற நிலையில் பணியாற்றும் காவலர்கள்!!

பரங்கிப்பேட்டை,ஆக்.05: பரங்கிப்பேட்டை கிளை சிறையின் மதில் சுவர் உடைந்து விழுந்து பல ஆண்டுகளாகியும், இதுவரை புதிதாக காம்பவுண்ட் சுவர் அமைக்கப்படாததால், பாதுகாப்பற்ற நிலை உள்ளது. இதனால், சிறை காவலர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பரங்கிப்பேட்டை பஸ் நிலையம் எதிரில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோர்ட், கிளைச்சிறை, போலீஸ் நிலையம் என முக்கிய அலுவலகங்களைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் உள்ளது. பரங்கிப்பேட்டை, புவனகிரி, புதுச்சத்திரம், மருதூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இருந்து கொண்டு வரப்படும் குற்றவாளிகள் பரங்கிப்பேட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.


அடிதடி வழக்கு, சாராய வழக்கு, கஞ்சா வழக்கு, கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபடும் குற்றவாளிகள் இந்த கிளைச்சிறையில் அடைக்கப்படுவார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கிளைச் சிறையின் பின்புறம் இருந்த மதிற் சுவர் 100 அடி நீளத்திற்கு மேல் உடைந்து விழுந்து விட்டது. பல ஆண்டுகளாகியும், உடைந்த மதில்சுவர் புதிதாகக் கட்டப்படவில்லை. இதனால் சிறை வளாகம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.


அந்த பகுதியை சேர்ந்தவர்களின் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கிளை சிறையின் உள்ளே சென்று, அங்குள்ள புல்வெளியில் மேய்ந்து வந்தன.அதையடுத்து, கிளைச் சிறை அதிகாரிகள், மதில் சுவர் உடைந்து விழுந்த இடத்தில் முள்வேலி அமைத்தனர். இதனால் சிறை வளாகத்திற்குள் கால்நடைகள் வருவது தடுக்கப்பட்டது. தற்போது, முள்வேலி படலும் சாய்ந்து விழுந்து விட்டதால், வழக்கம்போல் கால்நடைகள் கிளைச்சிறைக்கு மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன.உடைந்து விழுந்துள்ள மதில் சுவர் வழியாக யார் வேண்டுமானாலும் அனுமதியின்றி கிளைச் சிறைக்கு சென்று வரலாம் என்ற ஆபத்தான நிலை உள்ளது.


ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சிறையில் இருந்த கஞ்சா வழக்கு குற்றவாளியை மாலை நேரத்தில் வெளியில் அழைத்து வரும்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசை தாக்கிவிட்டு மதில் சுவர் மேல் ஏறி தப்பிச் சென்ற சம்பவமும் நடந்துள்ளது. 

அப்படி இருக்கும்போது, மதில் சுவர் உடைந்து விழுந்து பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை புதியதாக மதிற் சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கிளைச் சிறையில் பணிபுரியும் காவலர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.எனவே, பரங்கிப்பேட்டை கிளைச் சிறையில் உடைந்து போன மதில் சுவருக்குப் பதிலாக புதிதாக மதில் சுவர் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More