தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

September 16, 2013

முஸ்லிம்கள் மத நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களா?

செப்.16: இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளனர்.

ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பது இஸ்லாம் குறித்த மாற்று மத நண்பர்கள் செய்யும் விமர்சனமாகும்.

தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர்.முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களை முஸ்லிம் அல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத மக்கள் தங்கள் பண்டிகைகளின் போது வழங்கும் உணவுகளை முஸ்லிம்கள் உண்பது இல்லை.முஸ்லிம்கள் தாங்கள் அறுக்கும் மாமிசத்தை மட்டும்தான் உண்ணுகிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் அறுக்கும் மாமிச உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடுவது இல்லை.

முஸ்லிம் வழிபாட்டுத்தலங்களில் முஸ்லிமல்லாதவர்கள் வழிபாடு நடத்துகின்றனர்.ஆனால் முஸ்லிம்கள்,முஸ்லிம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தலங்களில் வழிபடுவது இல்லை.முஸ்லிம்கள் ஆணோ பெண்ணோ முஸ்லிம் அல்லாதவர்களிடம் திருமண உறவு வைத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை.முஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து தருவோம் என்று நிபந்தனை விதிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களை எடுத்துக் காட்டி முஸ்லிம்கள் எம்மதமும் சம்மதம் என்ற தத்துவத்துக்கு வேட்டு வைக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

 எம்மதமும் சம்மதம் என்ற தத்துவம் சரிதானா என்பதை முதலில் நாம் ஆய்வு செய்ய வேண்டும். உலகில் பல மதங்கள் இருக்கின்றன.ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றி சட்டதிட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன.இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால்தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன.

முரண்பாடுகள் இல்லாவிட்டால் ஒரே ஒரு மதம்தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதை இரண்டாவதாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை. பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை. இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும்.

முதல் கொள்கையை நம்பும்போது இரண்டாவது கொள்கையை நம்பும்போது ஒரு கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும்.எனவே இரண்டும் எனக்கு சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கடவுளுக்கு மனைவியர் உண்டு.மக்கள் உண்டு. கடவுளுக்கு தூக்கம் உண்டு.கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் சொல்கிறது. இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு 

எதிராக பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது. முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.

இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை.நம்ப முடியாது.நம்பக்கூடாது என்பது தான் பொருள்.முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடு களையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பவில்லை.நம்ப முடியாது.நம்பக்கூடாது என்பது அதன் பொருள்.

மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாதபடி ஆழமாக வேரூன்றியுள்ளன.கட்சிகள்,சங்கங்கள்,இயக்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை. மதங்களை விட குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன.அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ,திமுக,அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது.எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது.அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தரப்பவாதியாகவே கருதப்படுவார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரே நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்து இருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை.இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித் தனமில்லாத வழியைக் கூறுகிறது.எனக்கு என் மார்;க்கம் தான் பெரிது.உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன் என்பது இஸ்லாத்தின் நிலை.

உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)

அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும்.அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின்படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்று இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை.போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும். இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும்போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இனி தங்கள் விமர்சனத்தை நியாயப்படுத்துவதற்காக எம்மதமும் சம்மதம் எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.
முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரினங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை.

இந்தக் கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள் அறுப்பதை உண்ண மறுக்கின்றார்களே தவிர காழ்ப்புணர்வின் காரணமாக அல்ல.கடவுளுக்கு எந்தத் தேவையுமில்லை.கடவுளுக்காக எந்தப் பொருளையும் படைக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை.

இந்தக் கொள்கையில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் படையல் செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.கடவுளுக்கும் தேவையிருக்கிறது என்ற நம்பிக்கை வந்து விடக்கூடாது என்பதற்காகவும் பல கடவுள் கொள்கையை நம்பிவிடக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிட்டுள்ளது. இதற்குக் காழ்ப்புணர்வு காரணமில்லை.

முஸ்லிம்கள் எப்படி மற்றவர்கள் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டுமோ அதுபோல் மற்றவர்களும் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையை மதித்தால் எந்தப் பிரச்னையும் ஏற்படாது.இந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்கு நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். முஸ்லிம் நண்பர் தனது பெருநாள் பண்டிகையைக் கொண்டாடும்போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால் அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார்.

இந்து நண்பர் எதை விரும்பமாட்டாரோ அந்த உணவை இந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும் அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.இந்து நண்பர் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக எண்ணக் கூடாது.இதேபோல் முஸ்லிம்களுக்குத் தடைசெய்யப்பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு வழங்காமல்   இருப்பதே இஸ்லாத்தை மதிப்பதற்கு அடையாளமாகும்.

இவ்வாறு இரு சாராரும் நடந்து கொள்வதன் மூலம் ஒரு மதத்தவர் மற்ற மதத்தினரை மதித்து நடக்குமாறு இஸ்லாம் கூறுவதை நடைமுறைப்படுத்துகிறார்கள்.வழிபாட்;டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும்.ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளன.

அவரவர் தத்தமது மதத்தின்படி வழிபாடு நடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பதுதான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்.

ஒருவரது வழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்கு பதிலாக துவேஷம் தான் வளரும். ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக்கூடாது என்பது தான் இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கை. இந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள் இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.

திமுகவில் உறுப்பினரான இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில் மாட்டியிருப்பார்.அவரது அண்ணா திமுக நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறு கூறினால் அவர் ஏற்க மாட்டார்.

இவ்வாறு கூறுவது தான் சரி என்று யாரும் ஏற்க மாட்டோம்.அநாகரீகம் என்போம்.கடவுள் நம்பிக்கை இதைவிட வலிமையானதாகும்.எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.

இந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும், தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவது உண்மைதான் இதில் மத நல்லிணக்கத்துக்கு எந்த ஊறும் ஏற்படாது என்பதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். சாதி விட்டு சாதி,மதம் விட்டு மதம் திருமணம் செய்யும்போது தான் இரண்டு சமுதாயங்களுக்கிடையே கலவரங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாக பல உயிர்கள் பலியாகியுள்ளன.

பெரும்பாலான சாதி மதச் சண்டைகளில் பின்னணியில் பெண் விவகாரமே முக்கிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.எனவே இதை தவிர்ப்பதால் மனித குலத்திற்கு எந்தக் கேடும் ஏற்படப் போவதில்லை.
இனக்கவர்ச்சியினால் ஆணின் குறைபாடுகள் பெண்ணுக்கும், பெண்ணின் குறைபாடுகள் ஆணுக்கும் ஆரம்பத்தில் தெரியாது. மோகம் தணிந்த பின் யதார்த்த நிலையை இருவரும் உணர்வார்கள்.

வீட்டில் கடவுள் படங்களை மாட்டுவதிலிருந்து பெற்ற குழந்தைக்குப் பெயர் சூட்டுவது,வளர்ப்பது,சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் தகராறுகள் ஏற்படும். யாராவது ஒருவர் தனது மதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது பிரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்படும்.பின்னால் ஏற்படக்கூடிய இந்த நிலையைத் தான் இஸ்லாம் முன்கூட்டியே கூறுகிறது.

முஸ்லிமான ஆணை மணக்க விரும்பும் பெண்ணோ, முஸ்லிமான பெண்ணை மணக்க விரும்பும் ஆணோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாமல் இருக்கும். முஸ்லிமல்லாத ஆணோ பெண்ணோ இஸ்லாம் தமக்கு முக்கியமில்லை எனக் கருதி வேறு மதத்தவர்களை மணந்துக் கொண்டால் அதை யாரும் தடுக்கப் போவதில்லை.ஆரம்பத்திலேயே இதைப் பற்றி தீர்க்கமான முடிவெடுத்துக் கொள்வது எதிர்காலத்தில் ஏற்படும் பிளவையும் பிணக்கையும் தவிர்;க்கும் என்ற தூர நோக்கோடு தான் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிடுகிறது.

கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகர், கடவுள் நம்பிக்கை இல்லாத குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பினால் அதைக் கொள்கைப் பிடிப்பு என்று எடுத்துக் கொள்கிறோம்.இஸ்லாம் என்பதும் அதுபோன்ற ஒரு கொள்கை தான்.இஸ்லாம் இவ்வாறு வலியுறுத்தியதையும் முஸ்லிம்கள் இவ்வாறு நடந்துக் கொள்வதையும் இதுபோன்ற கொள்கைப் பிடிப்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.

ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்ன தான் முயன்றாலும் இன்னொரு சாதிக்காரராக முடியாது. ஆனால் யாரும் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்று முஸ்லிமாக முடியும். இதைப் புரிந்துக் கொண்டால் மத நல்லிணக்கத்துக்கு இஸ்லாம் எந்த வகையிலும் ஊறு விளைவிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ளலாம்.

நன்றி: உணர்வு

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More