தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 24, 2013

புவனகிரி வெள்ளாற்று பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்!

புவனகிரி, அக்.24: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி வெள்ளாற்று பாலம் வலுவிழந்ததால் ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு புதன்கிழமை (23.10.2013) முதல் பாலத்தில் போக்குரவரத்து நிறுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் - புவனகிரியை இணைக்கும் வகையில் ஆங்கிலேயேர் காலத்தில் வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. தற்போது அப்பாலம் பழுதடைந்து வலுவிழந்துள்ளது. இதனால் இப்பாலத்தை ரூ.15 லட்சம் செலவில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பாலத்தை சீரமைப்பது குறித்து கடந்த அக்.18-ம் தேதி நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் பொன்செல்வன், சென்னை கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார், உதவிபொறியாளர் மகேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு அக்.23-ம் தேதி முதல் பாலத்தில் பணியை தொடங்குவது என முடிவு செய்தனர்.
அக்.23-ம் தேதி முதல் சுமார் மூன்று மாதங்களுக்கு பாலத்தில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவித்துள்ளார். இதனால் புதன்கிழமை முதல் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது புவனகிரி பகுதி மக்கள் தீபாவளி வரை பாலத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தீபாவளி வரை பாலத்தில் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட சிறிய வாகனங்கள் மட்டும் இயக்கி கொள்ளலாம். அதன் பின்னர் முழுமையாக தடை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் மாற்றுப் பாதையில் போக்குவரத்து இயக்குவது குறித்து புவனகிரி, தீத்தாம்பாளையம், கீரப்பாளையம், சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் விளம்பர பலகைகள் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர்- சிதம்பரம் செல்லும் பேருந்துகள் சி.முட்லூர் வழியாகவும், விருத்தாசலம்- சிதம்பரம் செல்லும் பேருந்துகள் சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர், கீரப்பாளையம் வழியாகவும், சிதம்பரம்- குறிஞ்சிப்பாடி செல்லும் பேருந்துகள் சி.முட்லூர், புவனகிரி வழியாக செல்லும்.

இதை தவிர புவனகிரி - பி.முட்லூர் தடத்தில் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

படம்: தினகரன்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More