தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

October 29, 2013

இடஒதுக்கீடு அளித்தால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா?

அக்.29:இடஒதுக்கீடு அளித்தால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா?

பதில்கள் பகுதி - பதிலளிப்பவர்: பி.ஜைனுல் ஆபிதீன்

கேள்வி: பா.ஜ.க. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால், மற்ற பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவுக்கு வாக்களிப்போம் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரமுகர் பேட்டியளித்ததும், நிர்வாகத்தின் சார்பில் உடனே அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டதும், தவ்ஹீத் ஜமாஅத்தில் முரண்பாடுகள் உள்ளதைக் காட்டுவதாக சிலர் விமர்சனம் செய்கின்றனர்.

இதுபோல் வேறு எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாவது கூறியிருந்தால் தவ்ஹீத் ஜமாஅத்தினர் அதை லேசில் விட்டுவிடுவார்களா என்றும் முகநூல்களில் கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் செய்யப்பட்டு வருகின்றன. ஏன் இந்த முரண்பாடு? உங்களுக்கு ஒரு நீதி? மற்றவர்களுக்கு வேறு நீதியா?  - எம். அக்ரம் பாஷா, அபுதாபி

பதில்:

உங்கள் கேள்வியில் மூன்று விஷயங்கள் உள்ளன.

முதலில் இது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலை என்ன என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தால் அவ்வாறு அளிக்கும் கட்சி முஸ்லிம்களுக்கு எவ்வளவு அநீதி இழைத்திருந்தாலும் அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வாக்களிப்போம் என்ற தவ்ஹீத் ஜமாஅத் நிலைபாடு பாஜகவுக்குப் பொருந்தாது. இது பாஜக அல்லாத கட்சிகளைக் கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்ட நிலைபாடாகும்.

பாஜவைப் பொருத்தவரை சமுதாய உணர்வுள்ள எந்த முஸ்லிமும் இந்த நிலைபாட்டை எடுக்க மாட்டான்.

இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு முக்கியம் என்றாலும், அவர்களின் உயிர், உடமை மற்றும் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படுவது அதைவிட முக்கியமானதாகும். பாஜக இடஒதுக்கீடு அளித்தாலும் அதன் மூலம் பயன்பெற்று முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாத நிலையை ஏற்படுத்துவார்கள்.

பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்தது, கொலையாளிகளைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்தியது, பாபர் மஸ்ஜிதை இடித்தது மட்டுமன்றி இன்னும் மூவாயிரம் பள்ளிவாசல்களை இடிப்போம் என்று மிரட்டுவது, முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதப்பயிற்சி அளிப்பது, திட்டமிட்டு கலவரங்களை உருவாக்குவது, அப்பாவி முஸ்லிம்களை என்கவுண்டர் என்ற பெயரில் கொன்று குவிப்பது, முஸ்லிம்கள் தங்களது மத நம்பிக்கையின்படி நடத்தும் திருமணம் போன்ற விஷயங்களை ஒழிக்க பொது சிவில் சட்டம் என்று கூப்பாடு போடுவது, இப்படி ஏராளமான கொடுமைகளை பாஜகவினர் செய்துள்ளனர்.

முஸ்லிம்கள் வாழ்வதும் வழிபடுவதும் இவர்கள் ஆட்சியில் கேள்விக்குறியாகி விடும்.

எனவே இடஒதுக்கீடு அளிப்பதாக பா.ஜ.க. வாக்குறுதி அளித்தாலும், தவ்ஹீத் ஜமாஅத் பா.ஜ.க.வை ஆதரிக்காது. முஸ்லிம்களும் ஆதரிக்க மாட்டார்கள். இதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

பாஜக இட ஒதுக்கீடு அளித்தால் எல்லா பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பாஜகவை ஆதரிப்போம் என்று மேலாண்மைக் குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் பேட்டியில் குறிப்பிட்டது ஜமாஅத்துடன் முரண்பாடு கொண்டு சொன்னது அல்ல.

இடஒதுக்கீடுதான் முதன்மையானது. இடஒதுக்கீடு வழங்கினால் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் செய்த அநீதிகளை மறந்துவிட்டு ஆதரிப்போம் என்று தவ்ஹீத் ஜமாஅத் பல சந்தர்ப்பங்களிலும் தீர்மானத்திலும் சொல்லியுள்ளது.

இது பா.ஜ.க.வுக்குப் பொருந்தாது என்பதைக் கவனத்தில் கொள்ளாமல், செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது அப்படிச் சொல்லி விட்டார்.

இது தவறு என்று நாம் சுட்டிக் காட்டுவதற்கு முன்பே செய்தியாளர்கள் கேள்விகேட்டபோது இப்படிச் சொல்லிவிட்டேன். இவ்வாறு நான் சொல்லியிருக்கக் கூடாது என்று அவரே நம்மிடம் தெரிவித்தார்.

தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் என்ன தெரிவித்ததோ, அதுதான் அல்தாஃபியின் நிலையுமாகும்.

நான் சொன்னது சரிதான், அதுதான் எனது கருத்து என்று அவர் வாதிட்டால்தான் அதுமுரண்பாடு என்று கூற முடியும்.

சில கேள்விகளை திடீரென்று எதிர்கொள்ளும் போது இதுபோன்ற நிலமை சில வேளைகளில் ஏற்பட்டு விடுவதுண்டு.

ஜமாஅத்தில் இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் இல்லை. முரண்பாடுகளும் இல்லை என்பதை இரண்டாவதாகப் பதிவு செய்கிறோம்.

இது அவரது தனிப்பட்ட கருத்து என்று மற்ற அரசியல் கட்சிகள் கூறுவது போல் நாம் கூற மாட்டோம்.

இது ஜமாஅத்தின் நிலைபாட்டுக்கு எதிராக யாருக்கும் தனிப்பட்ட கருத்து இருக்க இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. சொந்த விஷயங்களில் தான் தனிப்பட்ட கருத்து இருக்கலாம்.

நன்றி : உணர்வு வார இதழ்

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More