தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

December 07, 2013

ஸஃபர் மாதமும் நாமும்!

டிச.07: மறைவான ஞானங்களை தெளிவாகத் தெரிந்திருக்கும் மகத்தான ஆற்றலாளனாகிய அல்லாஹ் தன் அருள்மறையில் கூறுகின்றான்...


மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். அவன்  தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில் இல்லாமல் இல்லை. (அல்குர்ஆன் 6:59)


இறையருளால் இஸ்லாமிய ஆண்டுக்கணக்கில் இரண்டாவது மாதமான ஸஃபர் மாதம். இம்மாதத்தில் முஸ்லிம்கள் வணக்க வழிபாடுகள் என்ற பெயரில் இஸ்லாம் காட்டித்தராத, இஸ்லாத்திற்கு முரணான எண்ணங்கொள்வதும், அதற்கேற்ற காரியங்களைச் செய்வதுமாய் இருக்கின்றனர்.

அவைகளை மூடநம்பிக்கைகளாய் அவர்கள் கருதுவதுமில்லை. இதனால் இஸ்லாத்தை மற்ற மதங்களைப் போன்று ஒரு மதமாக ஆக்குவதோடு அது ஏக இறைவனால் மனிதர்களுக்கு அருளப்பட்ட தனித்துவமிக்க ஒரு வாழ்வியல் மார்க்கம் என்பதை முஸ்லிம்கள் உணரவும், உணர்த்தவும் தவறி விட்டனர். தவறி வருகின்றனர். இது தங்களுக்கும், பிற மக்களுக்கும் தலைசிறந்த சன்மார்க்கத்திற்கும் தாங்கள் செய்யும் அநீதி என்பதை ஏனோ உணர மறுக்கின்றனர்.


குறிப்பாக ஸஃபர் மாதத்தை பீடை மாதமாகக் கருதுவது, நல்ல நாள், கெட்ட நாள் பார்ப்பது, சகுனம் பார்ப்பது, பால்கிதாபு, பார்வை பார்த்தல் போன்ற பெயர்களில் எல்லாம் இஸ்லாம் முற்றிலும் தடுத்துள்ள காரியங்களை இஸ்லாத்தின் பெயராலேயே முஸ்லிம்கள் செய்து வருகின்றனர்.இந்த மாதத்தில் பீடையைக் கழிப்பதாக எண்ணி பலர் கடற்கரைகளுக்குச் சென்று மூழ்கி வருகிறார்கள். இன்னும் பலர் புல்வெளிகளுக்குச் சென்று புற்களை மிதிக்கின்றார்கள்.


சிலர் ஸஃபர் குளி என்ற பெயரில் ஆற்றில் போய் குளித்தும், இன்னும் சிலர் மாவிலைகளில் 'ஸலாமுன் கவ்லம் மிர் ரப்பிர்ரஹீம்' என்ற அல்குர்ஆனின் வசனத்தை எழுதி அதனை நீரில் கரைத்துக் குடிக்கின்றனர். இவ்வாறு குடித்தால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று கருதுகிறார்கள்.

இன்னும் சில இடங்களில் பிரத்தியேகமாக, பீடையைப் போக்கு வதற்குகாகக் கொழுக்கட்டைகளைச் செய்து அதைப் பீடை பிடித்தவரின்(?) தலையில் கொட்டுவார்கள். மேலும் ஸஃபர் மாதத்தில் கல்யாணம் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளி வைத்து விடுவதைப் பார்க்க முடிகிறது. 'ஒடுக்கத்து புதன்' என்ற ஒரு வார்த்தையை இந்நாளில் பயன்படுத்துகின்றனர். அதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை.


பீடை என்றால் என்ன? அதன் அளவுகோல் யாது? அப்படிப்பட்ட பீடை தங்களிடம் உள்ளதா என்பதையெல்லாம் அறியாமலேயே 'பீடை கழியட்டும்?!| என்ற நினைப்பிலேயே பலர் மேற்சொன்ன காரியங்களைச் செய்கின்றனர். அதுவே நாளைடைவில் வழமையாக செய்யப்படும் ஒரு சடங்கு சம்பிரதாயமாக ஆகி விட்டது. இஸ்லாத்தில் இந்த காரியங்கள் உள்ளனவா? இறைவனிடம் இவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்குமா?! என்பதை யெல்லாம் ஆய்வு செய்யமலேயே மூடநம்பிக்கைகள் வணக்கங்களாக உருமாற்றப்படுகின்றன.


இது ஈமானுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து? இஸ்லாத்திற்கு எப்பேர்ப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்? எல்லாம் வல்ல அல்லாஹ்வின் முன் நஷ்டவாளிகளாய் போய் நிற்கும் அபாயம் நமக்கு ஏற்பட்டுவிடுமே என்ற எச்சரிக்கை உணர்வில் நாம் கவனமற்றவர்களாக இருக்கிறோம்.

இன்று ஸஃபர் மாதம் பீடை வணக்கங்கள் அல்லவா இஸ்லாத்தின் உயிர்நாடி? அவை அல்லாஹ்வும் அவனது தூதரும் (ஸல்) அவர்களும் காட்டித் தந்த வழிமுறையில் அல்லவா இருக்க வேண்டும்! அவற்றை அல்லாஹ்வுக்காக மட்டும் என்ற பரிபூரண நிய்யத்துடன் அல்லவா செய்ய வேண்டும்! ஸஃபர் மாதத்தில் நமது செயல்முறைகள் இந்த அடிப்படையில் தான் அமைந்துள்ளனவா? எண்ணிப் பாhக்க வேண்டாமா இஸ்லாமிய சமுதாயமே!


மாதமாக கருதப்படுவதைப் போன்று அன்று அரபியர்களிடத்தில்|ஷவ்வால் மாதமும், ஸஃபர் மாதமும் பீடையாகக் கருதப்பட்டது. பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, நபி(ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் தான் திருமணம் முடித்தார்கள். அம்மாதத்தில்தான் உடலுறவும் கொண்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு என்று கூறினார்கள். (அபூதாவூத்)


ஸஃபர் மாதம் வந்துவிட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என்று நம்பி அதைப் பீடைமாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் பீடை என்பது இல்லை என்று கூறினார்கள்.


'தொற்றுநோயும், பறவைச் சகுனமும், ஸபர்பீடை என்பதும் கிடையாது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புஹாரி 5707, 5717


எனவே இம்மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.


கெட்ட நாள் உண்டா?


காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.


'தொடர்ந்து துர்பாக்கியமாக இருந்த ஒரு நாளில் அவர்களுக்கு எதிராகக் கடும் சப்தத்துடன் காற்றை நாம் அனுப்பினோம்' (அல்குர்ஆன் 54:19)


இவ்வசனத்தில் நஹ்ஸ்(பீடை) நாளில் ஆது சமுதாயத்திற்குத் தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நல்ல நாட்கள், பீடை நாட்கள் மார்க்கத்தில் இருக்கிறது என்று சிலர் கூறி ஏமாற்றி வருகின்றனர். ஆனால் இவர்கள் நினைக்கும் கருத்தை இவ்வசனம் தரவில்லை. மற்றொரு வசனத்தில் (69:7) ஏழு நாட்கள் அவர்களுக்கு எதிராகக் காற்று வீசியாதாகவும், ஏழு நாட்களுமே பீடை நாட்கள் என்றும் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது (41:16)


ஏழு நாட்களில் எல்லாக் கிழமைகளுமே அடங்கும். இவர்களின் வாதப்படி எந்தக் கிழமையும் நல்ல கிழமை அல்ல என்ற கருத்து வரும். அதாவது 365 நாட்களுமே பீடை நாட்கள் என்று இவர்கள் முடிவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவார்கள். மேலும் அந்த நாட்களில் தீயவர்கள் மட்டும் தான் தண்டிக்கப்பட்டார்கள். நல்லவர்கள் காப்பாற்றப்பட்டனர். நல்லவர்களுக்கு அது பீடை நாட்களாக இல்லை. மாறாக நல்ல நாட்களாக அமைந்தன.


உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல. எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.


இவ்வசனத்தைச் சான்றாகக் கொண்டு நாங்கள் நல்ல நாட்கள் கணித்துத் தருகிறோம் என்று கூறுவோர் இது நல்ல நாள், இது கெட்ட நாள் என்பதை எவ்வாறு கண்டு பிடித்தார்கள்? இதற்குச் சான்றாக அமைந்த திருக்குர்ஆன் வசனங்கள் யாவை? ஹதீஸ்கள் யாவை? என்பதற்கு அவர்களால் விடை கூற இயலாது.

உலகத்துக்கு நல்ல நாள் பார்த்துக் கூறுவோர் தமக்கு ஒரு நல்ல நாளைப் பார்த்துக் கொள்ள முடிவதில்லை. அவர்களில் அனேகமாக அனைவரும் தரித்திர (பஞ்ச) நிலையில் தான் உள்ளனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதற்கு சமமானதாகும்.


ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்.' என்று அல்லாஹ் கூறுவதாக  நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி), நூல்: புஹாரி 4826


நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி(ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.

பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.


அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்: நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)


பிறமதக் கலாச்சாரம்!


இஸ்லாமிய மார்க்கம் ஓர் அறிவார்ந்த மார்க்கமென பிறமதத்தவர்கள் கூட கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்லிம்களோ மாற்று மதங்களில் காணப்படும் காரியங்களை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றுகின்றனர்.

பிறமதங்களில் உள்ளவர்களோ இஸ்லாத்தை ஆய்வு செய்து இஸ்லாம் ஓர் பகுத்தறிவு மார்க்கம் என்று கூறுகின்றனர். இஸ்லாத்தை ஏற்றிருப்பதாக சொல்லும் முஸ்லிம்களோ எந்த ஆய்வுமின்றி பிறமதங்களில் காணப்படும் மூடநம்பிக்கைகளை இஸ்லாத்தின் பெயரால் செய்து இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்ற ஒன்றுதான் என்று சொல்லாமல் சொல்கின்றனர். நவூதுபில்லாஹி மின்ஹா!


இவ்வாறு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் அல்ல என்றும், முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.


'உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கள் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக - முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடு கிறீர்கள் என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், வேறெவரை என்று பதிலளித்தார்கள்' அறிவிப்பவர்: அபூசயீது அல் குத்ரீ(ரலி) நூல்: புஹாரி 3456


இதுபோன்று நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைகள் பல இருக்கும் போது, இஸ்லாமிய சமுதாயம் இவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு மனம் போன போக்கில் செல்லக்கூடிய நிலையை தற்காலத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

பிறமதத்தினர் தேர் இழுப்பதையும், விழாக் கொண்டாடு வதையும் பார்த்து விட்டு அதை அப்படியும் இவர்கள் காப்பியடித்து சந்தனக்கூடு இழுப்பதையும், கந்தூரி கொண்டாடுவதையும் வழமையாக்கிக் கொண்டனர். இதுபோன்று இன்றைக்கு மாற்று மதத்தினர் ஆடி மாதத்தைப் பீடை மாதமாகக் கருதி கோயில் குட்டைகளுக்குச் சென்று தங்கள் பீடையை கழித்துக் கொள்கின்றனர்.


இதைப் பார்த்துதான் முஸ்லிம்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதி, அந்த மாதத்தில் இஸ்லாத்தில் இல்லாத நடைமுறைகளை பிறமதமதத்தவர்களிடமிருந்து காப்பியடித்து செய்து வருகின்றனர். இதுபோன்று மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கின்றார்கள். இதற்கு நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டுவதாக அமைந்துள்ளது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். 'தாத்துஅன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி(ஸல்) அவர்களிடத்தில், அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு 'தாத்து அன்வாத்' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்' என்று கூறினோம்.


அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஸுப்ஹானல்லாஹ்! அல்லாஹூ அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்: என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா(அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்.' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி), நூல்: திர்மிதி


தனக்குப் பின்னர் முஸ்லிம்கள் பல பித்அத்தான காரியங்களைப் பின்பற்றுவார்கள் என்பதை நபி(ஸல்) அவர்கள் உணர்ந்த காரணத்தினால் தான் புதுமையான காரியங்களை, பித்அத்துக்களைப்பற்றி எச்சரித்துக் கூறியுள்ளார்கள்.

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்' அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்: நஸயீ 1560

எனவே அல்லாஹ்வும், அவனது தூதர்(ஸல்) அவர்களும் செய்திருக்கும் எச்சரிக்கைகளையும், அறிவுரைகளையும் கருத்தில்  கொண்டு. ஸஃபர் மாதம் உள்ளிட்ட எந்த மாதத்தையும் கெட்ட நாளாக, பீடை நாளாகக் கருதாமல், இஸ்லாத்தின் தூய வடிவத்தை பிறமதக் கலாச்சாரத்தைக் கொண்டு களங்கப்படுத்தாமல் பின்பற்றி வாழ்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! நிச்சயமாக அல்லாஹ் மகத்தான அருளாளன்!

நன்றி: துபை TNTJ

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More