தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

April 09, 2014

நம்பிக்கைக் கொண்டவர்களே!

ஏப்.09: கண்ணியமும் மகத்துவமும் பொருந்திய அல்லாஹுதஆலா தன் திருமறையில் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே! என்று அழைத்து பல செய்திகளை சொல்லிக் காட்டுகிறான்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கைக் கொண்டு தன்னை முஸ்லிமாக அங்கீகரித்துக் கொண்டவனின் வாழ்க்கை எதனடிப்படையில் அமைய வேண்டும் என்றும்,எத்தகைய குணநலன்கள் ஒரு ஈமான் கொண்டவனிடம் குடிகொண்டிருக்க வேண்டும் என்பதையும்,ஈமான் கொண்டவர்களே!என்று அழைத்துக் கூறுகிறான். அவற்றில் சிலதை நாம் இங்கு காண்போம்.

பொறுமை:

நம்பிக்கைக் கொண்டவர்கள் தங்களுக்கு ஏற்படும் இன்னல்களையும்,துன்பங்களையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றும் நமக்கு சொல்லித்தருகிறான்.

நம்பிக்கைக் கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகை மூலம் உதவி தேடுங்கள்.அல்லாஹ் பொறுமை யாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)

மேலும், 
ஓரளவு அச்சத்தாலும்,பசியாலும்,செல்வங்கள்,உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களை சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன். 2:155)

ஒரு மனிதனுக்கு வாழ்வில் இதைப்போன்று சோதனைகள் கஷ்டங்கள் வரும்போது அவன் மனம் தளர்ந்து விடாமல் சகித்துக் கொண்டு பொறுமை காக்க வேண்டும் என்று நம்பிக்கைக் கொண்டோரைப் பார்த்துக் கூறுகிறான்.
தூய்மையானவற்றை உண்ணுங்கள்: அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டவர்கள் ஹலாலான பொருள்களை தான் உண்ண வேண்டும் என்றும், எந்தவொரு நிலையிலும் தவறான பாதையில் ஈட்டப்பட்ட பொருட்களை உண்ணக்கூடாது என்றும் வலியுறுத்துகிறான்.

நம்பிக்கைக் கொண்டோரே! நாம் உங்களுக்கு வழங்கிய தூய்மையானவற்றை உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வையே வணங்குவோராக இருந்தால் அவனுக்கே நன்றி செலுத்துங்கள் (அல்குர்ஆன்: 2:172)

 நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே உங்கள் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். திருப்தியுடன் நடக்கும் வியாபரத்தைத் தவிர. உங்களையே கொன்று விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன்: 4:29)

முழுமையாக தீனை பின்பற்ற வேண்டும்:   

நம்பிக்கைக் கொண்டவர்களிடம் இருக்க வேண்டிய பண்புகளில் முக்கியமானது இந்த தீனில்; தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.தன்னை ஒரு சரியான முஸ்லிமாக காண்பித்துக் கொள்ள வேண்டும்.எந்தவொரு நிலையிலும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக செயல்படக் கூடாது.


நம்பிக்கைக்கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்.ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரி. (அல்குர்ஆன்: 2:208)

 நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள். (அல்குர்ஆன்: 3:102)

 நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பியிருந்தால் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், உங்களில் அதிகாரம

வகிப்பவருக்கும் கட்டுப்படுங்கள்.ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்.இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும் (அல்குர்ஆன்: 4:59)

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கைக் கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர்புரிவார்கள். பழிப்போரின் பழிச்சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன். அறிந்தவன். (அல்குர்ஆன்: 5:54)
 நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் தனது தூதர் மீது அவன் அருளிய வேதத்தையும் இதற்கு முன் அவன் அருளிய வேதத்தையும் நம்புங்கள்.அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் அவனது தூதர்களையும் இறுதி நாளையும் ஏற்க மறுப்பவர் தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்(அல்குர்ஆன்: 4:136)

தர்மம் செய்தல்:

நம்பிக்கைக் கொண்ட மக்கள் தங்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளவற்றிலிருந்து ஏழைகளுக்கும்,துன்பப்படுபவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும்.தன்னிடம் இருக்கும் பொருளாதாரத்தை மற்றவர்களுக்கு தர்மம் செய்யாமல் தன்னிடமே வைத்திருக்கக் கூடாது என்று அல்லாஹ் நம்பிக்கைக் கொண்டவர்களை பார்த்து அறிவுறுத்துகிறான்.


 நம்பிக்கைக் கொண்டோரே! பேரமோ நட்போ பரிந்துரையோ இல்லாத நாள் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள். (நம்மை) மறுப்போரே! அநீதி இழைத்தவர்கள் (அல்குர்ஆன்: 2:254)

 நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து நாம் வெளிப்படுத்தி யதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டேதவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்.அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்: 2:267)

நாம் தர்மம் செய்வோராக இருக்கும்பட்சத்தில் நாம் செய்த தரமங்களை சொல்லிக் காட்டக்கூடாது. நம்மில் பலர் உதவிகளை செய்வார்கள். ஆனால் யார் உதவி பெற்றார்களோ அவர்கள் இவர்களுக்கெதிராக நடக்கும் பொது தாங்கள் செய்த உதவிகளை சொல்லிக் காண்பிப்பதை காண்கிறோம். ஆனால் அல்லாஹ் அதை விரும்புவதில்லை.

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தை செலவிடுபவனைப் போல் உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும் தொல்லைதந்தும் பாழாக்கி விடாதீர்கள். இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப்பாறை. அதன் மேல் மழை விழுந்தும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள் (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன். 2:264)

வட்டி வாங்கக்கூடாது: 

 நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்.(அல்குர்ஆன் 2:278)

நம்பிக்கைக் கொண்டோரே! பன் மடங்காக பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.இதனால் வெற்றி பெறுவீர்கள்.(அல்குர்ஆன்: 3:130)

கடனை எழுதிக் கொள்ளுங்கள்:

நம்பிக்கைக் கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து, ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள். எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்ததுபோல் எழுதிட எழுத்தர் மறுக்காத எழுதட்டும். கடன் வாங்கியவர் அதற்குரிய வாசகங்களை சொல்லட்டும். தனது இறைவiனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது.கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ பலவீனராகவோ எழுதுவதற்கு ஏற்ப சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்). அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள். அழைக்கப்படும் போது சாட்சிகள் மறுக்கக்கூடாது.   சிறிதோ பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதி கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள். இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது. சாட்சியத்தை நிரூபிக்கத் தக்கது. ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர. (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்கள் மீது குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும் போதும் சாட்சிகளை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். எழுத்தருக்கோ சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது.அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்று தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன். (அல்குர்ஆன், 2:282)

தீயவர்களை நண்பர்களாக்கக்கூடாது:

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களை விடுத்து மற்றவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கு இழைப்பதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சிரமப்படுவதை விரும்புவார்கள்.அவர்களின் வாய்களிலிருந்தே பகைமை வெளியாகி விட்டது. அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பது அதை விட அதிகம். நீங்கள் விளங்குவோராக இருந்தால் (நமது) வசனங்களை தெளிவுபடுத்தி விட்டோம். (அல்குர்ஆன்: 3:118)

நம்பிக்கைக் கொண்டோரே! நம்பிக்கைக் கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு எதிராக தெளிவான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா? (அல்குர்ஆன். 4:144)

நேர்மையாக செயல்படுதல்:

இன்றைய காலகட்டத்தில் நேர்மை என்பது என்ன விலை என்று சொல்லும் அளவுக்கு ஆகி விட்டது. எந்தவொரு செயலாக இருந்தாலும் அதில் நேர்மை வேண்டும். ஆனால் தங்களுக்கு பிடிக்கவில்லை

யென்பதற்காகவும்,அல்லது தங்களின் விருப்பத்திற்கு மாற்றமாக செயல்படுகிறார்கள் என்பதற்காகவும் அந்த வெறுப்பை வெளிப்படுத்திக் கொள்ள எதையும் செய்யத் துணிந்தவர்களாக இன்று முஸ்லிம்களும் இருந்து வருவதைக் காண்கிறோம்.

நீதிமன்றங்கள், நீதிபதிகள் என்பவர்கள் கொடுக்கக் கூடிய தீர்ப்புகள் நேர்மையானதாக இல்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்கும், தங்களின் சமுகத்தை சேர்ந்தவர்களுக்கும் அவர்கள் எத்தகைய கொடுமையான குற்றங்களை செய்திருந்தாலும் அவர்களை தண்டிக்காமல் விட்டு விடுவதும், கேட்க நாதியற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்கள் குற்றமே செய்யாமல் தண்டிக்கப்படுவதும் உலகில் நடைபெற்று வருவதையும் கண்டு வருகிறோம். அப்பேர்ப்பட்டவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். இஸ்லாம் அவர்களுக்கு நல்லுபதேசத்தையும் கூறுகின்றது.

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கோ, பெற்றோருக்கோ,உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலைநாட்டுவோராகவும், அல்லாஹ்வுக்காக சாட்சி கூறுவோராகவும் ஆகி விடுங்கள். (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்குமே அல்லாஹ்வே பொறுப்பாளன். நீதி வழங்குவதில் மனோ இச்சையைப் பின்பற்றாதீர்கள்.நீங்கள்(சாட்சியத்தை) புரட்டினாலோ, புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்.4:135)

 நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நீதிக்கு சாட்சிகளாக ஆகி விடுங்கள். ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை உங்களை நீதியாக நடக்கமாலிருக்க, உங்களை தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். (அல்குர்ஆன்.5:8)

வரம்பு மீறக் கூடாது: 

நம்பிக்கைக் கொண்டோரே! அல்லாஹ்வின் சின்னங்கள், புனிதமாதம், பலிப்பிராணி, மாலைகள், மற்றும் தமது இறைவனின் அருளையும் திருப்தியையும் தேடி இப்புனித ஆலயத்தை நாடிச் செல்வோர் ஆகியவற்றின் புனிதங்களுக்கு பங்கம் விளைவித்து விடாதீர்கள். இஹ்ராமிலிருந்து விடுபட்டதும் வேட்டையாடுங்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை வரம்பு மீறுவதற்கு உங்களை தூண்ட வேண்டாம். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவி செய்துக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்.அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 5:2)


 அல்லாஹ் தஆலா இறைநம்பிக்கைக் கொண்டவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று இன்னும் பல விஷயங்களை தன்னுடைய திருமறையில் தெளிவுப்படுத்தியுள்ளான்.மேலே நாம் அறிந்து வைத்துள்ள இத்தகைய பண்புகளை கொண்ட நம்பிக்கைக் கொண்டவர்களாகி அல்லாஹ்வின் நேசத்தை பெற முயலுவோமாக!

நன்றி: துபை TNTJ 

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More