தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

May 01, 2014

குண்டு வெடிப்பிற்கும், தேர்தல் ஆணையத்திற்கு TNTJ கடும் கண்டனம்!

சென்னை, மே.01: சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இன்று காலை 7.30 மணியளவில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிலர் உயிரிழந்தும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

மனிதகுலத்திற்கு எதிரான இத்தகைய குண்டு வெடிப்புகளை மனிதநேயமற்ற மிருகங்களாலேயே நிகழ்த்த முடியும். இவர்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தினராக இருந்தாலும் அவர்களை நீதியின் முன்னர் நிறுத்தி மரண தண்டனை கொடுப்பதே இறந்து போன உயிர்களுக்கு செய்யும் சரியான நீதியாகும்.

மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் இந்த சூழலில் குண்டுவெடிப்பு என்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்குகிறது. எனவே இந்த குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்து விட்டு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவ முன் வர வேண்டும்.

சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டிய காவல் துறையை தேர்தல்கள் நடைபெறும் போது தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை போட்டு அவர்களின் கையை கட்டி வைத்திருந்தது. தேர்தல் முடிந்த பிறகும் அது தொடர்கிறது.

தேர்தல் முடிந்த பிறகு ஓட்டுப்பெட்டிகளை பாதுகாக்கக்கூடிய வேலையை மட்டும் தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையை தேர்தல் விதிமுறைகள் இன்னும் அமுலில் உள்ளது என்று சொல்லி அவர்களுடைய கைகளை கட்டிப்போட்டதும்தான் இந்த அசம்பாவிதத்திற்கு முக்கிய காரணம் என்பதால் இதற்கு மறைமுக காரணமாயிருந்த தேர்தல் ஆணையத்தையும் வன்மையாக கண்டிக்கிறோம்

இனிவரும் காலங்களில் தேர்தல் ஆணையம் காவல் துறையின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்க வேண்டும்.

மனிதாபிமானமுள்ள எவராலும் எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாத இத்தகைய கொடூர குண்டுவெடிப்பை தமிழகத்தின் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More