தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - பரங்கிப்பேட்டை கிளையின் அதிகாரபூர்வ இணையதளம்

July 17, 2014

ஷரியத் கோர்ட்டுகள் சட்டப்படி செல்லாது என்கிற தீர்ப்பு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?


ஜுலை.17: ஷரியத் கோர்ட்டுகள் சட்டப்படி செல்லாது என்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு முஸ்லிம்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

கலீல் ரஹ்மான், சேலம்

ஷரியத் நீதிமன்றங்களுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்ற தீர்ப்பை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் ஒரு தீர்ப்பை அளிக்கும்போது அதைச் செயல்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய நபரைக் கைது செய்து சிறையில் அடைக்க முடியும்.

நீதிமன்றத்தால் ஒரு விவாகரத்து வழக்கில் கணவன், மனைவிக்கு மாதம் இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பதற்கும், ஜமாஅத்துகளில் விவாகரத்து வழங்கும்போது மனைவிக்கு இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பளிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. 

நீதிமன்றத்தால் அளிக்கப்பட்ட தீர்ப்பு மீறப்பட்டால் மீறியவர் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஜமாஅத்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கு கட்டுப்பட மறுத்தால் மறுப்பவர் மீது எந்த சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது.

இந்தக் கருத்தில்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றம் இத்தீர்ப்பை அளிக்காவிட்டாலும் முஸ்லிம்களுக்கு இது தெரிந்த செய்திதான்.

முஸ்லிம்களுக்கு, சில விஷயங்களில் தனியாக சட்டம் நமது நாட்டில் உள்ளது என்றாலும் அதை நடைமுறைப் படுத்தும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கோ ஷரியத் நீதிமன்றங்களுக்கோ இல்லை. இந்த அடிப்படையில்தான் இத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

”இந்த தீர்ப்பினால் முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஏனெனில் இத்தீர்ப்புக்கு முன்னரும் இதே நிலைதான் இருந்தது. எனவே இத்தீர்ப்புக்கு பின்னர் புதிதாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.”

மேலும் முஸ்லிம் ஜமாஅத்துகளில் அளிக்கப்படும் மார்க்கத் தீர்ப்பை அல்லாஹ்விற்குப் பயந்து இருதரப்பும் ஏற்றுக்கொள்வதுதான் பெரும்பாலும் நடைமுறையாக உள்ளது. இருதரப்பும் மார்க்கத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளும்போது நீதிமன்றங்கள் அதில் தானாக தலையிட முடியாது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் இந்த நிலைதான் நீடிக்கும்.

ஆயிரத்தில் ஒருவர் இத்தீர்ப்பை ஏற்காமல் கடந்த காலங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு இருக்கிறது. அதே நிலைதான் இனியும் இருக்கும்.

ஜமாஅத்துகளில் அளிக்கப்படும் மார்க்கத் தீர்ப்பை ஒருவர் ஏற்க மறுத்தால் அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க எந்த ஜமாஅத்தும் முன்வர மாட்டார்கள்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சம்மந்தப்பட்ட ஜமாஅத்தில் என்.ஓ.சி எனும் தடையில்லா சான்றிதல் வாங்கி வந்தால்தான் திருமணம் செய்து வைப்பார்கள். பெண் கொடுக்கவும் எடுக்கவும் மக்கள் முன்வருவதும் இதனடிப்படையில்தான்.

அல்லாஹ்வின் அச்சம் இல்லாவிட்டாலும் சமூகத்தில் இணைந்து வாழ முடியாது என்பதால் ஜமாஅத் தீர்ப்புகளை ஒருபோதும் மீற மாட்டார்கள். இந்தத் தீர்ப்புக்குப் பிறகும் இந்த நிலைதான் நீடிக்கும்.

ஜமாஅத்தின் தீர்ப்பு செல்லாது என்று நீதிமன்றம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்துவிட்டால் சம்மந்தப்பட்டவருக்கு முஸ்லிம் சமுதாயத்தில் உள்ளவர்கள் பெண் கொடுக்க எடுக்க முன்வர மாட்டார்கள். இந்த விஷயத்தில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

பொதுவாக மக்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு அஞ்சுகிறார்கள். எத்தனையோ கொடுக்கல் வாங்கள் பிரச்சனைகளை நீதிமன்றத்துக்கு வெளியே பேசி சமரசமாக்கிக் கொள்கின்றனர். அரசு வங்கிகள் கூட கடனாளிகளிடம் சமரச மையம் மூலமாகவே தீர்வு காண முயல்கிறது.

நீதிமன்றம் சென்றாலே கால விரையமும் பண விரையமும்தான் ஆகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முஸ்லிம்கள் குவியப்போவதில்லை.

எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்களில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகள் அவர்கள் பதவியை அனுபவித்து முடித்த பின்னர்தான் தீர்ப்புகள் அளிக்கப்படும். இதனால் பைசா பிரயோஜனம் இல்லை.

ஒரு சொத்து யாருடையது என்ற வழக்கின் இறுதித் தீர்ப்பு வழக்குக் தொடுத்தவனின் பேரன் காலத்தில்தான் தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சிவில் விவகாரங்களில் நீதிமன்றத்தை நாடுவதில்லை என்ற கருத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இத்தீர்ப்புக்கு பின்னரும் முஸ்லிம்கள் ஷரியத் கவுன்சில் அல்லது ஜமாஅத் சமரசம் போன்ற வழிகளைத்தான் தேர்வு செய்வார்கள்.

எனவே உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பும் பைசா பிரயோஜனம் இல்லாத தீர்ப்பாகத்தான் நமக்குத் தெரிகிறது.

http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/shariath-court-supreme-court/

0 comments:

Your IP

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More